“அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது” - காங். கிண்டல்

“அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது” - காங். கிண்டல்
Updated on
1 min read

புதுடெல்லி: அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. 3 வாரங்கள் அவர் நாட்டில் இருப்பார்; பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார். இதை முன்னிட்டு, காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. அவர் 3 வாரங்களுக்கு நாட்டில் இருப்பார், பின்னர், மீண்டும் வெளிநாடு செல்வார்.” என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் காத்திருக்கும் மக்களைச் சென்று சந்திக்க தற்போது அவருக்கு நேரம் கிடைக்கும். பஹல்காம் பயங்கரவாதிகள் ஏன் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறித்து அவர் சிந்திப்பார். அவரது சொந்த மாநிலத்தில்(குஜராத்) பாலம் இடிந்து விழுந்த விபத்து குறித்து சிந்திப்பார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்துக்கு உதவிகளை வழங்குவார்.

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் மேற்கொள்வதில் அவரால் கவனம் செலுத்த முடியும். மேலும், வேண்டிய மிகப் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் என்றில்லாமல், மற்ற தனியார் நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்க அவர் நடவடிக்கை எடுக்கலாம்.

ஒரு மாற்றமாக, வர இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை உறுதிப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கலாம்,” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் அரசு முறைப் பயணமாக கடந்த வாரம் புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கானா நாட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து ட்ரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in