Last Updated : 24 Jul, 2018 12:39 PM

 

Published : 24 Jul 2018 12:39 PM
Last Updated : 24 Jul 2018 12:39 PM

பசு மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதை நிறுத்துங்கள்; அடித்துக் கொல்லும் குற்றத்தைத் தடுக்கலாம்: ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சை கருத்து

மக்கள் பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், நாட்டில் ஆங்காங்கே நடக்கும் அப்பாவிகளை அடித்துக்கொல்லும் குற்றத்தையும் தடுக்க முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே பசுமாடுகளை ஏற்றிச் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கியது. இதில் ரக்பர்கான் என்ற இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் கடந்த வாரம் பசு குண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து அப்பாவிகளை தாக்குவதைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் கடுமையான தண்டனைகள் உள்ளடக்கிய பிரத்யேக சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில் ஆல்வாரில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே பசு மாட்டிறைச்சியை சாப்பிடுவதை நிறுத்தினால்தான் இந்தக் குற்றம் தடுக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் இந்து ஜாக்ரன் கட்சி அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டில் பசுப் பாதுகாவலர்களால், பசுமாடுகளைக் கடத்திச் செல்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. மக்கள் பசு மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஏன் இந்தக் குற்றம் நடக்கப்போகிறது. பசு மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், அடித்துக்கொல்லும் குற்றம், உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படும்.

பசுவைக் கொல்லுதல் எந்த மதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்து மதத்தில் இது கோமாதாவாகப் பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தில் பசுவைப் புனிதமாகக் கருதி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். புனித ஏசு மாட்டுக்கொட்டகையில்தான் பிறந்தார். முஸ்லிம் மதத்தில் மெக்கா, மெதினாவில் பசுவைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த மதத்திலும் பசுவைக் கொல்லுதல் சரி என்று குறிப்பிடப்படவில்லை.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சட்டம் இருக்கிறது. அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதேசமயம், மக்களும் தங்களின் சமூகப்பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சமீபத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவருடைய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை தேவை.''

இவ்வாறு இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x