அகமதாபாத் விமான விபத்து: அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

விபத்துக்குள்ளான விமானம் | கோப்புப் படம்
விபத்துக்குள்ளான விமானம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தனது முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் - இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதில், இந்திய விமானப் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏஏஐபி-ன் இயக்குநர் ஜெனரல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் விமானத்தின் கருப்பு பெட்டி கடந்த ஜூன் 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் மோதிய விடுதியின் ஒரு கட்டிடத்தின் கூரையில் இருந்து அது கண்டெடுக்கப்பட்டது. இதில் ‘காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் (சிவிஆர்) மற்றும் பிளைட் டேட்டா ரிக்கார்டர் (எப்டிஆர்) என்ற இரு சாதனங்கள் இருக்கும். சிவிஆர் சாதனத்தின் விமான அறையில் நடைபெற்ற உரையாடல்கள் பதிவாகும். எப்டிஆர் சாதனத்தின் விமானம் பறந்த உயரம், வேகம், விமானி இயக்கிய விதம் உட்பட ஏராளமான தகவல்கள் சுமார் 25 மணி நேரத்துக்கு பதிவாகும்.

இந்த தகவல்களைப் பெறுவதன் மூலம், விபத்துக்கான சரியான காரணத்தை தெரிந்து கொள்ள முடியும். எனவே, இந்த கருப்பு பெட்டி ஆய்வுக்காக டெல்லியில் உள்ள கருப்பு பெட்டி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. ரூ.9 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திறக்கப்பட்ட இந்த நவீன ஆய்வு மையத்தில் கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டன. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏஏஐபி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in