Published : 06 Jul 2025 06:44 AM
Last Updated : 06 Jul 2025 06:44 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கி வருகிறது. தற்போது புதிதாக அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட 30 இடங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலாத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்களை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் திட்டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயிலாகும்.
இந்த ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் திட்டம் வரும் 25-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். அயோத்தி, நந்திகிராம், சீதாமார்ஹி, ஜனக்பூர், புக்சார், வாராணசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித்தலங்களை இந்த சுற்றுலாத் திட்டம் இணைக்கிறது. இறுதியாக இந்த ரயில் டெல்லியை வந்தடையும்.
இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது, “அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அயோத்திக்கு வருகின்றனர். மேலும், மத மற்றும் கலாச்சார சுற்றுலாத்துறை மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, இது நாங்கள் நடத்தும் 5-வது ராமாயண சுற்றுப்பயணமாகும், மேலும் எங்கள் முந்தைய அனைத்து சுற்றுப்பயணங்களும் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன" என்று தெரிவித்தனர்.
இந்த சுற்றுலாத் திட்டத்தில் பங்கேற்கும் பயணிகள் 3-வது ஏசி வகுப்பில் செல்ல ரூ.1,17,975-ம், 2-வது ஏசி வகுப்பில் செல்ல ரூ.1,66,380-ம், முதல் வகுப்பு ஏசியில் செல்ல ரூ.1,79,515-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். இந்தக் கட்டணத்தில் ரயில் டிக்கெட், 3 நட்சத்திர ஓட்டல்களில் தங்குதல், 3 வேளை உணவு (சைவம் மட்டும்), ரயிலில் இருந்து புனித்தலம் செல்வதற்கான வாகன வசதி, சுற்றுலாக் காப்பீடு, ஐஆர்சிடிசி சேவைகள் அனைத்தும் அடங்கும்.
இந்த ரயில் டெல்லி சப்தார்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 25-ம் தேதி புறப்படும். இந்தப் பயணத்துக்கு நவீன வசதிகள் அடங்கிய பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் பயன்படுத்தப்படும். முதலாவதாக அயோத்தி ராமர் கோயில் செல்லும் இந்த ரயில் அதன் பின்னர் மற்ற புனிதத் தலங்களை அடையும். 17 நாள் சுற்றுலா முடிந்த பின்னர் இறுதியாக டெல்லிக்கு இந்த ரயில் வந்தடையும் என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT