Last Updated : 05 Jul, 2025 07:37 PM

1  

Published : 05 Jul 2025 07:37 PM
Last Updated : 05 Jul 2025 07:37 PM

“புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” - தலாய் லாமா

தர்மசாலா: புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் நாளை( ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, “ அவலோகிதேஸ்வராவின் ஆசிகளை நான் பெற்றதாகவே உணர்கிறேன். இதுவரை நான் எனது பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். நாம் மேலும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

குழந்தைப் பருவம் முதலே எனக்கு அவலோகிதேஸ்வராவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பவுத்தத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

புதிய தலாய் லாமா சலசலப்பு - திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்" என தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு , “அடுத்த தலாய் லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு-வின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? - ஒரு சுருக்கமான தெளிவுப் பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x