பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை

பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை
Updated on
1 min read

பாட்னா: பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா, நேற்று இரவு பாட்னாவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாட்னாவில் பனாச் ஹோட்டலுக்கு அருகில் உள்ள 'ட்வின் டவர்' சொசைட்டியில் கோபால் கெம்கா வசித்து வந்தார். அவர் நேற்று இரவு தனது வீட்டுக்குச் செல்வதற்காக காரில் இருந்து இறங்கியபோது, மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பேசிய பாட்னா நகர மத்திய காவல் கண்காணிப்பாளர் தீக்ஷா, “ஜூலை 4-ம் தேதி இரவு 11 மணியளவில், காந்தி மைதான காவல்நிலையப் பகுதியில் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. குற்றம் நடந்த இடம் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். சம்பவ இடத்திலிருந்து ஒரு தோட்டா மீட்கப்பட்டுள்ளது” என்றார். கோபால் கெம்கா கொலை வழக்கு தொடர்பாக பிஹார் காவல்துறை சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது என்று டிஜிபி வினய் குமார் தெரிவித்தார்.

பாஜக பிரமுகரான கோபால் கெம்கா, பிஹார் மாநிலத்தின் பழமையான தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான மகத் மருத்துவமனையின் உரிமையாளர் ஆவார். பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. நிதிஷ் குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

முன்னதாக, 2018-ம் ஆண்டில் பாட்னாவின் வைசாலி பகுதியில் உள்ள பருத்தி தொழிற்சாலைக்கு முன்பு தனது காரில் இருந்து இறங்கும்போது, ​​பட்டப்பகலில் கோபால் கெம்காவின் மகன் குஞ்சன் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார். அதே பாணியில் இப்போது கோபால் கெம்காவும் காரில் இருந்து இறங்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in