ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? - ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு

ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங்
ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI ) ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் ஆர் சிங், "இந்தியா ஒரு எல்லையில் (பாகிஸ்தான் எல்லை) இரண்டு எதிரிகளை (பாகிஸ்தான், சீனா) கொண்டுள்ளது. உண்மையில் மூன்று எதிரிகள் (பாகிஸ்தான், சீனா, துருக்கி). போரில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கியது.

பாகிஸ்தான் கடற்படையில் 81% சீன வன்பொருட்களே(ஹார்டுவேர்) உள்ளன. முழு ராணுவ நடவடிக்கையின்போது வான் பாதுகாப்பு எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியமானது. இந்த முறை, நமது நாட்டில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் முழுமையாகக் கவனிக்கப்படவில்லை. அடுத்த முறை, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமக்கு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் அவசியம்.

பாகிஸ்தானுக்கு அதிக ஆதரவை வழங்குவதில் துருக்கி முக்கியப் பங்கு வகித்தது. அவர்கள் பைரக்தார் உள்ளிட்ட ஏராளமான ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கினர். இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நமது முக்கியமான நகர்வுகள் குறித்த உடனடி தகவல்களை சீனா மூலம் பாகிஸ்தான் பெற்றது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் பாராட்டுக்குரியவை. இலக்குகள், தொழில்நுட்பம், மனித நுண்ணறிவு ஆகியவற்றின் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு அது. மொத்தம் 21 இலக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 9 இலக்குகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. முடிவு எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது, குறைந்த கால அவகாசத்தில் இலக்குகள் குறிவைக்கப்பட்டன.

ராணுவம் தனது இலக்கை எய்தும்போது, அது தனது தாக்குதலை நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஏனெனில், போரை தொடங்குவது எளிது, அதை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே, சரியான நேரத்தில் போரை நிறுத்துவதற்கும் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகவும் திறமையான தாக்குதல் இது என்று நான் கூறுவேன்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in