Published : 04 Jul 2025 06:58 AM
Last Updated : 04 Jul 2025 06:58 AM
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறைகளின் செயல் திறன், மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன்படி ஆண்டுதோறும் மாநிலங்களின் பள்ளிக் கல்வி தரம் குறித்த செயல் திறன் தர நிர்ணய குறியீடு (பிஜிஐ - 2.0) வெளியிடப்படுகிறது. இந்த வரிசையில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான செயல் திறன் தர நிர்ணய குறியீடு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் ஒடிசா மாநிலம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன பட்நாயக் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான பள்ளி தர நிர்ணய பட்டியலில் ஒடிசா மாநிலம் 14-வது இடத்தில் இருந்து தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனைக்கு முந்தைய பிஜு ஜனதா தள அரசின் 5டி திட்டமே காரணம். 5டி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 7,000 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் புதிய ஒடிசாவை உருவாக்க முடியும் என்று பிஜு ஜனதா தளம் உறுதியாக நம்புகிறது. இதற்காக 5டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் பலன் இப்போது கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்த ஒடிசாவின் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி: தமிழகத்தின் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கூத்தப்பட்டியை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன். கடந்த 2000-ம் ஆண்டில் அவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பஞ்சாப் மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார். பின்னர் ஒடிசாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்து ஒடிசா மாநில பணிக்கு மாறினார். முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரியாக வி.கே.பாண்டியன் பணியாற்றினார். பிஜு ஜனதா தள அரசின் 5டி உட்பட பல்வேறு அரசு திட்டங்களை ஒடிசாவில் வெற்றிகரமாக அமல்படுத்தினார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்.
வி.கே.பாண்டியன் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் ஒடிசாவின் பள்ளிக் கல்வியை மேம்படுத்த 5டி திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, அன்றைய முதல்வர் நவீன் பட்நாயக் 5டி திட்டம் குறித்து கூறினார். பள்ளிக் கல்வித் தரத்தில் கேரளாவை முந்திச் செல்ல 5டி திட்டம் உறுதுணையாக இருக்கும்
என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது சாத்தியமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் லட்சிய இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது.
கீழ் நிலையிலிருந்து முதல் 5 இடங்களுக்கு முன்னேற்றம்: 73 தர நிர்ணயங்களின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வி மதிப்பிடப்பட்டு செயல்திறன் தர நிர்ணய குறியீடு வெளியிடப்படுகிறது. இதற்கு முன்பு கீழ்நிலை மாநிலங்களின் பட்டியலில் ஒடிசா இருந்தது. இந்த தரநிர்ணய குறியீட்டில் ஒடிசா 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது கேரளாவை முந்தியிருக்கிறோம். இந்த சாதனை மகத்தானது.
பள்ளிக் கல்வியில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்திய ஒடிசா குழுவினரை வாழ்த்துகிறேன். தேசிய தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியது எளிதான விஷயமல்ல. அனைத்து தரப்பினரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.
5டி திட்டத்தின் கீழ் நம்முடைய லட்சிய கனவை, நனவாக்கிய மாணவர்கள், பெற்றோர், பல்வேறு சமுதாயங்களின் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாக குழுக்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
5டி திட்டம் என்றால் என்ன? - தொழில்நுட்பம் (technology), கூட்டு முயற்சி (team work ), வெளிப்படைத்தன்மை (transparency ), நேரம் (time), மாற்றம் (transformation ) ஆகியவற்றின் சுருக்கமே 5டி திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஒடிசா முழுவதும் 10-ம் வகுப்பு வரையிலான 7,000 பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டன.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன், 5 டி திட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று மாநிலம் முழுவதும் திட்டத்தை திறம்பட அமல்படுத்தினார். குறிப்பாக தொழில்நுட்பத்தின் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டது. அவர்களின் கல்வி கற்கும் ஆர்வம் தூண்டப்பட்டது. ஒடிசாவில் 5டி திட்டத்தில் அன்று விதைத்த விதை இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT