கடலில் கலக்கும் 2,000 டிஎம்சி நீரில் 200 டிஎம்சி கோதாவரி நீர் மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்: சந்திரபாபு நாயுடு உறுதி

கடலில் கலக்கும் 2,000 டிஎம்சி நீரில் 200 டிஎம்சி கோதாவரி நீர் மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்: சந்திரபாபு நாயுடு உறுதி
Updated on
1 min read

குப்பம்: ஆண்டுக்கு 2 ஆயிரம் டிஎம்சி கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி அளவு தண்ணீர் மக்களின் நலனுக்காக உபயோகப்படுத்தப்படும் என்று குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2 நாட்களாக தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நல திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாக்களில் கலந்து கொண்டார். நேற்று காலை குப்பத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில் ராயலசீமா தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ரூ.3,950 கோடி ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தோம். சிறிய நீர்பாசன திட்டங்களுக்கு 90 சதவீதம் மானியம் வழங்கி வருகிறோம். கோதாவரியில் ஆண்டுக்கு 2000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி நீர் விவசாயத்திற்காக உபயோகப்படுத்தி கொள்ளப்படும். இதனால் தெலங்கானாவிற்கு நஷ்டம் ஏதும் இல்லை. இதுபோன்று விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க வழிகளை உருவாக்கி கொடுத்துள்ளோம்.

தாய்க்கு வந்தனம் திட்டம் மூலம் 1-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். வீட்டில் எத்தனை பிள்ளைகள் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கி வருகிறோம். ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்குகிறோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பெண்களுக்கு ஆந்திர மாநிலம் முழுவதும் இலவசமாக பேருந்து பயணம் செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

ஆந்திர மாநிலத்திலேயே முதன் முறையாக நேற்று குப்பம் அரசு மருத்துவமனையில் டாடா டிஜிட்டல் நெர்வ் சென்டரை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இந்த மையம் மூலம் குப்பம் தொகுதியில் உள்ள 12 ஆரம்ப சுகாதார மையங்களும் இணைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in