Published : 01 Jul 2025 06:28 PM
Last Updated : 01 Jul 2025 06:28 PM
புதுடெல்லி: பிஹார் கிராமத்தில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்துக்கு இணையாக யாதவர்கள் சமூகம் அதிகம் இருக்கும் மாநிலம் பிஹார். இதன் மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரிலுள்ள திகுலியா கிராமத்தின் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
பிராமண சமூகத்தின் பண்டிதர்கள் மற்றும் பூசாரிகளுக்கு எதிரான இந்த முடிவை அடாபூரின் திகுலியா கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டு ள்ளது. இது, உ.பி.யில் கதாகலாட்சேபகர் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டதன் எதிரொலியாகக் கருதப்படுகிறது.
உ.பி.யின் மூத்த கதாகலாட்சேபகர் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். இதனிடையே, முகுட்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர். பிராமணர் அல்லாத முகுட்மணி யாதவ் கதாகலாட்சேபம் செய்யக் கூடாது என்ற புகார் அந்த தாக்குதலில் காரணமாக கூறப்படுகிறது. இதன் மீது எதிர்க்கட்சியான சமாஜ் வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.
யாதவர்கள் கதாகலாட்சேபம் செய்வதன் மீது ஆதரவாகவும், எதிராகவும் ஆன்மிக வாதிகளும் கருத்துகளை கூறியிருந்தனர். மேலும், முகுட்மணி மீது பாலியல் மற்றும் தாம் பிராமணர் எனப் பொய் கூறிய மோசடி வழக்குகளும் பதிவாகி இருந்ததால் இவ்விவகாரம் தலைகீழாக மாறியது.
உ.பி.யில் சமூக அரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இச்சம்பவத்தின் தாக்கம், பிஹாரிலும் பிரதிபலிக்க செய்தது. உ.பி எட்டாவா சம்பவத்திற்கு எதிர்க்கும் வகையில் திகுலியா கிராம வாசிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இந்த அறிவிப்பு பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் பல மின் கம்பங்களிலும் பிராமண பண்டிதர், பூசாரிகளுக்கு எதிரான இதே வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதை விட ஒரு படி அதிகமாக, சில கிராம வாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்புறத்திலும் இதுபோன்ற அறிவிப்புகளை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். இந்த கிராமத்தில் பிராமண மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், பிராமண மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் அருகிலேயே உள்ளன.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட பிறகு, பிராமணர்கள் திகுலியா கிரமத்திற்குள் வருவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எதிர்க்கும் வகையிலான அறிவிப்பின் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, உ.பி.யை போல், பிஹாரிலும் அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கும் சூழல் உருவாகி வருகிறது. இதன் பின்னணியில் அக்டோபரில் பிஹாரின் சட்டப்பேரவை தேர்தல் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT