உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட மேக வெடிப்பில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சுமார் 9 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கனமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட மேக வெடிப்பினால் யமுனோத்திரி கோயிலுக்கு செல்லும் வழியில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேர் காணவில்லை என்பதை அங்குள்ள பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையும் தெரிவித்துள்ளது. மேக வெடிப்பு குறித்த தகவல் தங்களுக்கு நள்ளிரவு கிடைத்ததாக பர்க்கோத் காவல் நிலைய அதிகாரி தீபக் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

சம்பவப் பகுதியில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வந்துள்ளனர். அவர்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த இடமே கூடாரம் இருந்ததற்கான அடையாளம் இல்லாத வகையில் மாறியுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.. காணாமல் போன 9 தொழிலாளர்களும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். இந்த மழையால் உத்தரகாசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், மழையால் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கனமழையை தொடர்ந்து யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விளைநிலங்களில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுகள் தேங்கி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in