ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

Published on

மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி சாகிப் நாச்சன் மூளை ரத்தக் கசிவால் டெல்லி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

மும்பையில் கடந்த 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான வழக்குகளில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாகிப் நாச்சன் கைது செய்யப்பட்டார். ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நாச்சனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்து கடந்த 2017-ல் விடுதலை ஆனார்.

இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இதில் நாச்சன் மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24-ம் தேதி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நாச்சன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 1990-களில் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பில் சேர்ந்த நாச்சன், படிப்படியாக உயர்ந்துள்ளார். பின்னர் ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in