பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கல்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கல்!
Updated on
1 min read

புதுடெல்லி: சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கப்பட்டது.

டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் எனக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவித்தீர்கள். நான் இதற்கு தகுதியானவன் என்று கருதவில்லை. ஆனால், துறவிகளிடமிருந்து நாம் எதைப் பெற்றாலும், அதை 'பிரசாதமாக' ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரம். எனவே, இந்த 'பிரசாதத்தை' நான் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, அதை மா பாரதிக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று பிரதமர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த நாள் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் 1987-ம் ஆண்டு ஜூன் 28 அன்று, ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜ் 'ஆச்சார்யா' என்ற பட்டத்தைப் பெற்றார். இது ஒரு மரியாதை மட்டுமல்ல, சமண கலாச்சாரத்தை கருத்துகள், கட்டுப்பாடு மற்றும் இரக்கத்துடன் இணைக்கும் ஒரு 'பவித்ர தாரா'வும் கூட. இன்று நாம் அவரது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது, ​​இது அந்த வரலாற்று தருணத்தை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஆச்சார்யா ஸ்ரீ முனிராஜியின் ஆசிர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இந்தியா உலகின் பழமையான உயிர்ப்பான கலாச்சாரத்தை கொண்டது. நமது கருத்துகள் அழியாதவை, நமது எண்ணங்கள் அழியாதவை, நமது தத்துவம் அழியாதவை என்பதால் நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாதவர்களாக இருக்கிறோம். இந்த தத்துவத்தின் ஆதாரம் நமது முனிவர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்கள் ஆவர்” என்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இணைந்து, ஆச்சார்யாவின் நினைவாக நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in