'இரண்டு ஹெல்மெட்டுகள் கட்டாயம்' - மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு

'இரண்டு ஹெல்மெட்டுகள் கட்டாயம்' - மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

கடந்த ஜூன் 23 அன்று மத்திய அரசு வெளியிட்ட வரைவு அறிவிப்பின்படி, ‘புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர், இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இருசக்கர வாகன உற்பத்தியாளர் இந்திய தரநிலைகள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரத்துடன் 2 தலைக்கவசங்களை வழங்க வேண்டும்.

வழங்கப்படும் தலைக்கவசங்கள் இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) நிர்ணயித்த தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களுக்கு இந்தத் தேவை பொருந்தாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 1, 2026 முதல், 50சிசி க்கு மேல் எஞ்சின் திறன் அல்லது மணிக்கு 50 கிமீ வேகத்திற்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட அனைத்து புதிய எல்2 வகை இரு சக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்தப்படுவதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் இந்திய தரநிலை IS14664:2010 உடன் இருக்க வேண்டும். இந்த ஏபிஎஸ் பாதுகாப்பு அமைப்பானது வாகனத்தின் திடீர் பிரேக்கிங்கின் போது சறுக்குவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முன்மொழியப்பட்ட இந்த புதிய விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை அனுப்ப 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in