அந்தமான் நிக்கோபரில் 4.6 ரிக்டரில் நிலநடுக்கம்
புதுடெல்லி: அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நேற்று இரவு 8.28 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ அந்தமான் நிக்கோபர் தீவின் போர்ட்பிளேயரில் இருந்து 254 கிமீ தென்கிழக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 9.75°N மற்றும் தீர்க்கரேகை 94.06°E ஆக இருந்தது. கடலுக்கு அடியில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 25 அன்று அந்தமான் கடலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல கடந்த மாதம் மணிப்பூரில் இரண்டு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. இருப்பினும், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இன்று தெற்கு பிலிப்பைன்ஸிலும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் இருந்து 101 கிலோமீட்டர் ஆழத்திலும், சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
