Published : 28 Jun 2025 06:23 AM
Last Updated : 28 Jun 2025 06:23 AM
அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதளங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு சார்பில் சுற்றுலா விசா, வர்த்தக விசா, மாணவர் விசா, பணி விசா, உறவினர்களை சந்திக்க சார்பு விசா என பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களை பெற டிஎஸ்-160 படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சூழலில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் தங்களது சமூக வலைதளங்களை விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். அதாவது டிஎஸ்-160 படிவத்தில் கடந்த 5 ஆண்டு கால சமூக வலைதளங்களின் முழுமையான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இந்த விவரங்கள் உண்மையானவை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். டிஎஸ்-160 படிவத்தில் சமூக வலைதளங்களின் விவரங்களை குறிப்பிடவில்லை என்றால் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “விசா நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க அரசின் புதிய விதிகள் குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் அமெரிக்க விசாக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
விசா கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க குடியேற்றத் துறை நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதளங்களின் விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் விண்ணப்பதாரரின் கொள்கை, கோட்பாடுகள், அவரின் பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
அமெரிக்காவில் கல்வி பயில ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களின் சமூக வலைதளங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் பலரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க விசா கிடைக்காத இந்திய மாணவ, மாணவியர் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு அமெரிக்க குடியேற்றத் துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT