கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: மூன்று பேர் கைது

குறியீட்டுப் படம்
குறியீட்டுப் படம்
Updated on
1 min read

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (ஜூன் 25) இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை நடந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்திருப்பதாக கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி இன்று (ஜூன் 27, 2025) தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் கஸ்பா காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைப் அகமது (19 வயது) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில், மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர். மற்றவர்கள், கல்லூரியின் தற்போதைய மாணவர்கள்.

மனோஜித் மிஸ்ராவும், ஜைப் அகமதுவும் நேற்று (ஜூன் 26) மாலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது குற்றவாளியான பிரமித் முகர்ஜி இன்று (ஜூன் 27) அதிகாலை 12.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சாட்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது கொல்கத்தாவில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in