ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published on

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த நிலையில், அந்த அமைப்பு அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கிய நவம்பர் 30, 1949 முதல் அதில் ஈடுபட்ட டாக்டர் அம்பேத்கர், நேரு உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தாக்கியது. ஆர்எஸ்எஸ்ஸின் சொந்த வார்த்தைகளில் சொல்வதானால், அரசியலமைப்பு மனுஸ்மிருதியைப் போல் இல்லை.

புதிதாக அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கான அழைப்புகளை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பலமுறை விடுத்துள்ளன. 2024 மக்களவைத் தேர்தலின் போது மோடியின் பிரச்சார முழக்கம் இதுவாகவே இருந்தது. எனினும், இந்திய மக்கள் இந்தக் கூக்குரலை உறுதியாக நிராகரித்தனர். இருப்பினும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்எஸ்எஸ் சுற்றுச்சூழல் அமைப்புகளால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

ஒரு முன்னணி ஆர்எஸ்எஸ் நிர்வாகியால் இப்போது எழுப்பப்படும் இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 25, 2024 அன்று இந்திய தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளார்.” என தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல்களை அதில் இணைத்துள்ளார்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ஆர்எஸ்எஸ், அரசியலமைப்பை அதன் தொடக்கத்திலிருந்தே தாக்கி வருகிறது. ஆர்எஸ்எஸ், அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அது 'மனுஸ்மிருதியைப் போல் இல்லை' என்று விமர்சித்துள்ளனர். பாஜகவின் 2024 தேர்தல் பிரச்சார முழக்கமே, இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்பதாகத்தான் இருந்தது. அப்போதுதான், அவர்களால் அரசியலமைப்பை மாற்ற முடியும்.

ஒரு முன்னணி ஆர்எஸ்எஸ் நிர்வாகியால் இப்போது எழுப்பப்படும் இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 25, 2024 அன்று அப்போதைய இந்திய தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in