நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து

நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவை கடந்த மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும் என்னைப் பொறுத்தவரை அரசியல் சாசனம்தான் உயர்ந்தது. ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரம் இருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை மாற்ற முடியாது.

ஒரு நீதிபதி நமக்கு ஒரு கடமை இருக்கிறது, குடிமக்களின் உரிமைகள், அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் பாதுகாவலர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் நம் மீது சுமத்தப்பட்டுள்ளது என உணர வேண்டும்.

ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதும்போது சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பைப் பற்றி என்ன சொல்வார்கள் என்ற அடிப்படையில் நீதிபதி செயல்படக்கூடாது. அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் அடிப்படையில்தான் என்னுடைய தீர்ப்புகள் அமைந்திருக்கும்.

சுதந்திரப் போராட்டத்தின்போது என் தந்தை கைது செய்யப்பட்டார். அப்போது வழக்கறிஞராக ஆக வேண்டும் என்ற அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. இதனால், நான் வழக்கறிஞராக வேண்டும் என என் தந்தை விரும்பினார். ஆனால் நான் சிறு வயதில் கட்டிடக்கலை நிபுணராக விரும்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in