தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி, ரங்காரெட்டி மாவட்டம், நாகலபல்லி - சங்கர பல்லி இடையே 7 கி.மீ தூரத்துக்கு தண்டவாளத்தின் மீது தனது காரை ஓட்டிச் சென்றார். அப்போது இதனை யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அங்குள்ள பொதுமக்கள் விரட்டி சென்று காரை நிறுத்தும்படி எச்சரித்தனர்.

ஆனால், ரவிகா சோனி யாருடைய பேச்சையும் கேட்காமல் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இந்த சமயத்தில் பக்கத்து தண்டவாளத்தில் ரயில் வந்தது. அதனை ஓட்டி வந்த பைலட், யாரோ தண்டவளாத்தில் காரை ஓட்டி வருவதை பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே இது தொடர்பாக அருகே உள்ள ரயில் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

அதற்குள் பொதுமக்கள் ஓடி வந்து, அந்த காரை நிறுத்தி, ரவிகா சோனியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கினர். மேலும், காரையும் தண்டவாளத்தில் இருந்து இறக்கினர். தகவல் அறிந்த சங்கரபல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in