வாக்குமூலம் அளிக்க முன்வராத நடிகைகள்: ஹேமா கமிட்டி சார்ந்த வழக்குகள் முடித்துவைப்பு

வாக்குமூலம் அளிக்க முன்வராத நடிகைகள்: ஹேமா கமிட்டி சார்ந்த வழக்குகள் முடித்துவைப்பு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வாக்குமூலம் அளிக்க முன்வராததால், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளும் முடித்துவைக்கப் பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த இந்த அறிக்கையின் அடிப்படையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திரைப்படத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தனர். அதையேற்ற கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு கமிட்டியை அமைத்தார்.

அந்த கமிட்டியில் நீதிபதி ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு முதல்வரிடம் சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் கடந்த ஆண்டுதான் வெளியாயின. அதில் இருந்த தகவல்கள் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த அறிக்கையில், மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள், துணை நடிகைகள் சிலர் பாலியல் வன்முறை புகார்களைக் கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவும் சுமார் 35 வழக்குகளைப் பதிவு செய்து, புகார் கூறியவர்களிடம் தகவல்களை சேகரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in