ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு: பின்னணி என்ன?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு: பின்னணி என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: பயங்கரவாதம் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

எஸ்சிஓ கூட்டு அறிக்கையில் பஹல்காம் பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், அதே நேரத்தில் பலுசிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பலுசிஸ்தானில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு தலைமை வகிக்கும் சீனாவும், அதன் நட்பு நாடான பாகிஸ்தானும் எஸ்சிஓவின் கூட்டு அறிக்கையில் பயங்கரவாதம் குறித்த நிலைப்பாட்டிலிருந்து திசைதிருப்ப முயன்றதாகவும், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் ராஜ்நாத் சிங் உறுதியாக இருந்ததாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. அத்தகைய நாடுகள் தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது” என்றார்

கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பின்னர் மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து சீனா சென்றுள்ள முதல் அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in