அவசரநிலை காலத்தில் இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன்: பிரதமர் மோடி தகவல்

அவசரநிலை காலத்தில் இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன்: பிரதமர் மோடி தகவல்
Updated on
2 min read

புதுடெல்லி: எமர்ஜென்சி காலத்தில் நான் ஒரு இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகள் அவசரநிலை நாட்டில் அமலில் இருந்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நேற்றுடன், 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் புளுகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற அமைப்பு, எமர்ஜென்சி குறித்த புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்தப் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

இதனிடையே அவசரநிலை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியுள்ளதாவது: அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டப்போது, நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இளம் பிரச்சாரகராக இருந்தேன். அவசர நிலை எதிர்ப்பு எனக்குப் பாடமாக இருந்தது. நமது ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த காலக்கட்டத்தில், பல்வேறு அரசியல் பிரிவுகளில் இருக்கும் பல பேரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.

எமர்ஜென்சி காலம் குறித்து புளுகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் ஒரு புத்தகத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, எமர்ஜென்சி காலத்தின் சில அனுபவங்களைப் புத்தகமாகத் தொகுத்து உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவசர நிலை எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவேகவுடா இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவரே எழுதியுள்ளார்.

‘தி எமர்​ஜென்சி டைரீஸ்’ - தி எமர்ஜென்சி டைரீஸ் என்ற பெயரில் இந்தப் புத்தகம் வந்துள்ளது. இந்த தி எமர்ஜென்சி டைரீஸ் புத்தகமானது எமர்ஜென்சி ஆண்டுகளில் எனது பயணத்தைக் குறிக்கிறது. இது அன்றைய காலகட்டத்தின் நினைவுகளைக் கொண்டு வருகிறது.

இருண்ட எமர்ஜென்சி காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அப்போதைய காலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 1975 - 1977 அவமானக் காலகட்டம் குறித்து இளைஞர்களிடம் நான் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

இந்த காலத்தில் அதை எதிர்த்து போரிட்ட ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1975 முதல் 1977 வரை இருந்த எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை இந்த புத்தகம் தெரிவிக்கிறது. இது இளைஞர்களிடையே, விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இருண்ட அத்தியாயம்: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: அவசர நிலையை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.

இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, ஜனநாயகத்தை கைது செய்தது போல் இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி அதில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in