உ.பி.யில் கதாகாலட்சேபம் செய்பவர் மீது தாக்குதல்: பிராமணர் அல்லாதவர் பிரசங்கம் செய்யக் கூடாது என மிரட்டல்

முகுந்த்மணி சிங் யாதவ்
முகுந்த்மணி சிங் யாதவ்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருபவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரசங்கத்தை பிராமணர் அல்லாதவர் செய்யக் கூடாது என அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்ணி சிங் யாதவ். இவர் தனது குழுவினருடன் கடந்த 15 வருடங்களாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. இச்சூழலில் அவர் மேற்கு உ.பி.யின் எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் இவரை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியதுடன் அவரது தலையை மொட்டை அடித்து விரட்டியது. இவரது உதவியாளர் சந்த் குமார் யாதவும் அப்போது தாக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி உ.பி.யில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சம்பவம் குறித்து முகுந்த்மணி சிங் அளித்த புகாரில், "எனது சமூகம் என்னவென்று கேட்டு, நான் பிராமணர் இல்லை என்று உறுதி செய்த பிறகு அக்கும்பல் என்னை தாக்கியது. என்னிடம் இருந்த ரூ.25,000 ரொக்கம் மற்றும் தங்க செயினை பறித்துக் கொண்டது" என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக எட்டவா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகுந்த்மணி தாக்கப்பட்ட சம்பவம் நமது அரசியமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய சாதுக்கள் சபையின் தேசியப் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறும்போது, "வால்மீகி முதல் கபீர்தாஸர் வரை பிராமணர் அல்லாத பலரும் கதாகாலட்சேபம் செய்துள்ளனர். இதை காரணமாக வைத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தின் மூலம் உ.பி.யை சமூகரீதியாகப் பிரிக்கும் முயற்சியை முறியடிப்பது அவசியம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in