Published : 24 Jun 2025 04:58 PM
Last Updated : 24 Jun 2025 04:58 PM
புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது என்றும், அதில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். அதோடு, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட விமானத்தில் பயணிக்காத 33 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அறியும் நோக்கில், விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், அது தீயில் கடுமையாக சேதமடைந்ததால், அதனை ஆய்வுக்கு அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
எனினும், இந்த செய்தி தவறானது என விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகந்தர், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்திருந்தார். எனினும், கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், விபத்துக்குள்ளான AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி இன்னும் இந்தியாவில்தான் இருப்பதாகவும், அது குறித்து விமான விபத்துகள் புலனாய்வுப் பணியகம் விசாரித்து வருவதாகவும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதிப்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT