ஈரான், இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய 457 இந்தியர்கள்

ஈரான், இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய 457 இந்தியர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: ஈரானில் இருந்து 292 பேரும், இஸ்ரேலில் இருந்து 165 பேரும் தனித்தனி விமானம் மூலம் இன்று புதுடெல்லி திரும்பினர். அவர்களை அமைச்சர் எல். முருகன், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருவதால், அந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் நோக்கில் ஆபரேஷன் சிந்து எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரும் பணிகளை ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகங்கள் துரிதமாக மேற்கொண்டன.

ஈரானின் மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்ட 292 இந்தியர்கள் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் புதுடெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்திய தேசியக் கொடியைக் கொடுத்து வரவேற்றனர்.

இதேபோல், இஸ்ரேலில் சிக்கித் தவித்த 165 இந்தியர்கள் ஜோர்டான் தலைநகர் அம்மான் வழியாக இன்று காலை புதுடெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேலில் இருந்து அம்மானுக்கு தரை மார்க்கமாக அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்திய போர் விமானம் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதன்மூலம், இன்று ஒரே நாளில் 457 பேர் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

புதன்கிழமை முதல் ஈரானிய நகரமான மஷாத், ஆர்மீனிய தலைநகர் யெரெவன் மற்றும் துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்காபாத் ஆகியவற்றிலிருந்து இயக்கப்படும் தனி விமானங்கள் மூலம் இந்தியா தனது குடிமக்களை வெளியேற்றியுள்ளது.

மஷாத்தில் இருந்து மூன்று தனி விமானங்களை இயக்க வசதியாக ஈரான் வெள்ளிக்கிழமை வான்வெளி கட்டுப்பாடுகளை நீக்கியது. முதல் விமானம் வெள்ளிக்கிழமை 290 இந்தியர்களுடன் புதுடெல்லியில் தரையிறங்கியது, இரண்டாவது விமானம் சனிக்கிழமை பிற்பகல் 310 இந்தியர்களுடன் புதுடெல்லியில் தரையிறங்கியது. வியாழக்கிழமை ஆர்மீனிய தலைநகர் யெரெவனில் இருந்து மற்றொரு விமானம் வந்தது. அஷ்காபாத்தில் இருந்து ஒரு சிறப்பு தனி விமானம் சனிக்கிழமை (ஜூன் 21, 2025) அதிகாலை புதுதில்லியில் தரையிறங்கியது. ஈரானில் இருந்து இதுவரை 2,295 இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in