உ.பி.யில் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் ‘பாஸ்’ ஆவதை தடுக்க ஆன்லைன் வருகைப் பதிவு அமல்

உ.பி.யில் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் ‘பாஸ்’ ஆவதை தடுக்க ஆன்லைன் வருகைப் பதிவு அமல்
Updated on
1 min read

புதுடெல்லி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கைக்கு பின் வகுப்புகளுக்கு வராமலேயே தேர்ச்சிபெற மாணவர்கள் முயல்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் அன்றாட வருகையை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

உ.பி-யில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அரசு நிதியும் கிடைக்கிறது. இதற்காக அப்பள்ளிகள் குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்ச்சி விகிதத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம். இதனால், அரசு அங்கீகாரப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை சமாளிக்க பல பள்ளிகள் சட்டவிரோதமாக தவறான முறைகளில் இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதில், ‘கோஸ்ட் முறை’ எனப்படும் பள்ளிக்கு வராமல் சேர்க்கை என்ற முறை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பள்ளிக்கு வராத மாணவர்கள் சேர்க்கைக்கு பின் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் இறுதி தேர்வுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து தேர்ச்சியும் பெறுவதாகவும் புகார் உள்ளது.

இதே ‘கோஸ்ட் முறை’யில் அப்பள்ளிகளில் ஆசிரியர்களும், அலுவலர்களும் இருப்பதாகவும் தெரிகிறது. இதை சரிசெய்ய உ.பி அரசு அனைவரது வருகையை ஜுலை 1 முதல் ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதற்குமுன், அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்காமலேயே ஊதியம் பெறுவதாகப் புகார்கள் இருந்தன. இவர்களில் சில ஆசிரியர்கள் தமக்கு பதிலாக வேறு ஒருவரை குறைந்த ஊதியமளித்து பள்ளிக்கு அனுப்பியதும் நடைபெற்றது.

இந்த முறையால், ஓரிரு ஆசிரியர்கள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றுவதும், அவர்கள் பல கோடி ரூபாய் அரசு ஊதியம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத் முதன்முதலில் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்தி இருந்தார்.

இப்போது மாணவர்களுக்கும் ஆன்லைன் வருகைப்பதிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த முறையை உ.பியின் அனைத்து பள்ளிகளின் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலும் செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று பிரயாக்ராஜிலுள்ள உ.பி அரசு கல்வி இயக்கக தலைமை அலுவலகத்தில் ஒத்திகை நடைபெற்றது. உ.பி அரசின் இந்த புதிய உத்தரவின்படி அம்மாநிலக் கல்வி நிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in