Last Updated : 24 Jun, 2025 06:46 AM

8  

Published : 24 Jun 2025 06:46 AM
Last Updated : 24 Jun 2025 06:46 AM

கர்நாடகாவின் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு

கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது: கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுபான்மையினருக்கு போதுமான வீடுகள் கிடைப்பதில்லை. எனவே இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதாவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.

இதற்கு அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ''கர்நாடகாவில் வசிக்கும் சிறுபான்மையினரில், வீடில்லாத ஏழை மக்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு நகர்ப்புறங்களில் ஒதுக்கப்படும் வீட்டு திட்டங்களில் போதிய வீடுகள் கிடைப்பதில்லை. மண்டியா, ஹாசன் போன்ற ஊரகப் பகுதிகளில் ஒதுக்கப்படும் வீடுகளில் குடியேற ஆட்கள் இருப்பதில்லை. தற்போது சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அம்மக்களுக்கு வீடுகள் கிடைக்கும் என நம்புகிறேன்''என்றார்.

முஸ்லிம் வாக்கு வங்கி: கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: கர்நாடக அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. ஏற்கெனவே அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது வீட்டு வசதி திட்டங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாபாசாகேப் அம்பேத்கர் ஏற்கவில்லை. ஆனால் கர்நாடக அரசு அதனை அமல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையால் இட ஒதுக்கீட்டினால் பலன்பெறும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வீடில்லாமல் தவிக்கும்போது, அரசு முஸ்லிம்களுக்கு வீட்டை வழங்கி வருவது நியாயமற்றது. இவ்வாறு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா பதிலளிக்கையில், ''நாங்கள் மத அடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை. வீடில்லாத மக்களுக்கு தேவையின் அடிப்படையில் உதவவே, இடஒதுக்கீடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வீட்டு வசதி திட்டங்களில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை நாங்கள் பின்பற்றினால் பாஜகவினர் எதிர்க்கின்றனர். எல்லாவற்றிலும் அரசியல் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x