குண்டர் தடுப்பு சட்டத்தில் சைபர் குற்றவாளிகள் கைது: தமிழகத்தின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு

குண்டர் தடுப்பு சட்டத்தில் சைபர் குற்றவாளிகள் கைது: தமிழகத்தின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு
Updated on
2 min read

தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை பானுமதி (74). கடந்த ஆண்டு மே மாதம் இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், “உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய செல்போன் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக உங்களை கைது செய்ய உள்ளோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த பானுமதி, “நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று மன்றாடி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், “குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம்" என்று கூறியுள்ளார். இதை நம்பிய பானுமதி, மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.84.5 லட்சம் வரை பணம் அனுப்பினார்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீஸில் பானுமதி புகார் அளித்தார். இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து, டெல்லி துவாரகாவில் வசித்த அபிஜித் சிங் (36) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப், 103 டெபிட், கிரெடிட் கார்டுகள், 28 காசோலை புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அபிஜித் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

தமிழக போலீஸாரின் விசாரணையில், அபிஜித் சிங் தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயர்களிலும் 4 நிறுவனங்களை தொடங்கியிருப்பது தெரிய வந்தது. சைபர் மோசடிகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பறிக்கும் பணத்தை இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூழலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அபிஜித் சிங் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சந்தீப் மேத்தா, ஜோய் மால்யா பாக்சி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது கிரிமினல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு தருணங்களில் சைபர் குற்றவாளிகள் சட்டத்தில் பிடியில் இருந்து எளிதாக தப்பிச் செல்கின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை பானுமதி வழக்கில் பஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட அபிஜித் சிங், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது நல்ல முயற்சி. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 25-ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in