Published : 23 Jun 2025 12:27 PM
Last Updated : 23 Jun 2025 12:27 PM
புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஜெயராம் ரமேஷ் எக்ஸ் பதிவு: இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரான் மீது அமெரிக்க விமானப்படையை கட்டவிழ்த்து விட அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட கருத்தை கேலி செய்வதாகும்.
ஈரானுடன் உடனடியாக ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்திய அரசாங்கம் இதுவரை இருந்ததை விட அதிக தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவின் குண்டுவீச்சு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் ஆகியவை குறித்து மோடி அரசாங்கம் விமர்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் அது கடுமையான மவுனத்தைக் கடைபிடித்து வருகிறது" என விமர்சித்துள்ளார்.
3 அணுசக்தி தளங்கள் அழிப்பு: அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறிவைத்து ஜிபியு-57 பங்கர் ரக வெடிகுண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் தலா 2 குண்டுகள் என மொத்தம் 14 குண்டுகளை வீசின. இவை 90 மீட்டர் ஆழத்துக்கு பூமியை துளைத்துச் சென்று, வெடித்துச் சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்றிலுமாக சேதமடைந்தது.
ஈரானின் நடான்ஸ், இஸ்பகான் நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள், ஜிபியு-57 பங்கர் வெடிகுண்டுகளை வீசின. அதேநேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடியில் முகாமிட்டிருந்த அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவுகணைகள் சீறி பாய்ந்தன. இந்த ஏவுகணைகளும் நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களை அடுத்தடுத்து தாக்கின. அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கிகளின் தாக்குதல்களால் ஈரானின் 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
சோனியா காந்தி கண்டனம்: முன்னதாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், "காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மிக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது மதிப்புகளையும் இழப்பதைப் போன்றதாகும்.
இத்தகைய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் 'இரு-நாடு' தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கைவிட்டுவிட்டது.
இந்த விவகாரத்தில் இனிமேலும் தாமதிக்காமல் இந்தியா தெளிவாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT