பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: முக்கியத்துவம் என்ன?

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், பிரதமர் மோடி
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் - ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த துறைமுகத்தில் இந்திய தரப்பில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது. பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

இரு நாடுகள் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்தச் சூழலில், போர் தீவிரமடைந்து, ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில்,பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஹோமுஸ் ஜலசந்தியை மூடலா? - அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை, ஹோமுஸ் ஜலசந்தியை மூடினால் அது கச்சா எண்ணெய் போக்குவரத்தில் உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தும். இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு ஆகியவற்றை இந்த வழியாகத்தான் பெறுகிறது. இதனால் இந்தியா மற்றும் ஒபெக் நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in