ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ல் கடற்படையில் சேர்ப்பு

ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ல் கடற்படையில் சேர்ப்பு
Updated on
1 min read

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளதாவது:

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ம் தேதி ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

கடல் மற்றும் நிலத்தை குறிவைக்கும் நீண்ட தூர கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட 26 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு இந்த கப்பலில் உருவாக்கப்பட்டுள்ளது.

125 மீட்டர் நீளம், 3,900 டன் எடையுடன் இந்த போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களின் கலவையை கொண்ட இந்த போர்க்கப்பல் மேற்கு கடற்படைப் பிரிவில் போர்வாளாக திகழும்.

ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறன்களின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்தியா-ரஷ்யா கூட்டாண்மையின் வலிமையை எடுத்துக்காட்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் எட்டாவது போர்க்கப்பல் இதுவாகும். இவ்வாறு மத்வால் தெரிவித்துள்ளார்.

கடவுள்களின் ராஜாவான இந்திரனால் போருக்குப் பயன்படுத்தப்பட்ட புராண வாளைக் குறிக்கும் வகையில் இந்த போர்க்கப்பலுக்கு தமால் என பெயரிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in