Published : 30 Aug 2014 03:26 PM
Last Updated : 30 Aug 2014 03:26 PM

கூட்டணிக்கு மம்தா அழைப்பு; கம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரிப்பு

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று மம்தா பானர்ஜி விடுத்துள்ள அழைப்பை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் 42 தொகுதிகளில் இரண்டு இடங்களைக் அந்தக் கட்சி கைப்பற்றியது.

இந்நிலையில் தொலைக்காட்சி சேனலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிஹாரில் பாஜகவுக்கு எதிராக லாலு பிரசாத், நிதிஷ் குமார் அமைத்த கூட்டணி வரவேற்கத்தக்கது.

அதுபோன்ற சூழ்நிலை மேற்கு வங்கத்தில் எழுந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக உள்ளது. அரசியலில் தீண்டத்தகாதவர்கள் என்று யாரும் இல்லை என்று தெரிவித்தார். இந்த கூட்டணி அழைப்பை கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மம்தா பானர்ஜியால்தான் மேற்கு வங்கத்தில் பாஜக கால் பதித்தது. மதவாத சக்தியான பாஜகவை, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து நின்று எதிர்க்கும். ஆனால் மம்தா பானர்ஜியுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

மார்க்சிஸ்ட் நிராகரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சூர்ய காந்த மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:

1998-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மேற்குவங்கத்தில் பாஜகவை கால்ஊன்ற செய்தது மம்தா பானர்ஜிதான். அவரோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

புரட்சிகர சோஷலிஸ்ட்

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஷிதி கோஸ்வாமி கூறியபோது, திரிணமூல் காங்கிரஸின் அராஜகத்தால் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வீடுகளை இழந்துள்ளனர், அவரது அணுகுமுறையால்தான் மதவாத கட்சிகள் மேற்குவங்கத்தில் வளர்ச்சி பெற்றன என்று குற்றம் சாட்டினார். பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியபோது, திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

நாங்கள் வளர்கிறோம்: பாஜக பெருமிதம்

பாஜக தேசியச் செயலாளர் சித்தார்த் நாத் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வளர்ச்சி அடைவது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அச்சமடைந்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க முடியாது. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார். அவரது பேட்டியே பாஜகவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறியபோது, திரிணமூல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க முயற்சிக்கும் என்று முன்னரே நான் கூறியுள்ளேன், எனது கணிப்பு இப்போது உண்மையாகி உள்ளது. யார் தடுத்தாலும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x