ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்

ஆபரேஷன் சிந்து திட்டத்தின் கீழ் ஈரானில் இருந்து நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்த இந்தியர்கள் தேசியக் கொடியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம்: பிடிஐ.
ஆபரேஷன் சிந்து திட்டத்தின் கீழ் ஈரானில் இருந்து நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்த இந்தியர்கள் தேசியக் கொடியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம்: பிடிஐ.
Updated on
1 min read

ஈரானிலிருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் ‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’ என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்பட்டதால், ஈரான் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களை தாய்நாடு அழைத்து வர வேண்டும் என அவர்களது பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஈரானில் இந்தியர்கள் சுமார் 4,000 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை , தாய்நாடு அழைத்து வரும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டது. இதற்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டது.

சர்வதேச விமான போக்குவரத்துக்கு, ஈரான் வான்வழியை மூடியிருந்ததால், அர்மீனியா எல்லை வழியாக இந்தியா மாணவர்கள் முதல் குழுவினர் 110 பேர் தோகா அழைத்து வரப்பட்டு பின் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன்பின் இந்தியாவுக்காக, வான்வழியை திறக்க ஈரான் சம்பதித்தது. இதையடுத்து ஈரானிலிருந்து இரண்டாவது குழுவில் 290 இந்தியர்கள், ‘மகான்’ என்ற ஈரானிய விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு டெல்லி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள். மற்றவர்கள் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றவர்கள். தேசியக் கொடியுடன் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இவர்கள், ‘‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’’ என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர்.

இவர்கள் டெஹ்ரானில் இருக்கும் போது பல முறை குண்டு சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். பெண் ஒருவர் ஆனந்த கண்ணீருடன் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி. இந்தியாவில் தரையிறங்கியபின்புதான் நிம்மதியாக உள்ளது. வாழ்க்கையில் நிம்மதி என்றால், அது இந்தியாவில்தான் உள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in