கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
Updated on
1 min read

கர்நாடகாவில் போலிச் செய்திகள், தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 10-க்கும் மேற்பட்ட உயிர் சேதமும், கோடிக்கணக்கில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறான தகவல்கள் பரப்புவதை தடுக்கவும், பெண்கள் குறித்த அவதூறான செய்திகளை தடுக்கவும் சமூக வலைதள ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அரசு ஏற்படுத்தியது. இதற்காக 6 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்தது. இந்தக் குழு பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசித்து இதற்கான சட்ட வரைவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்த குழுவினர் "கர்நாடக தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் தடை மசோதாவை" தயாரித்து, சட்டத்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்தனர். அதில், சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் போலிச் செய்திகள் கண்டறியப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்புதல், அவதூறு கருத்துகளை பகிர்வோருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கடுமையான சட்டப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா குறித்து விரைவில் அமைச்சரவையில் விவாதிக்க முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். அதில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in