Published : 21 Jun 2025 12:26 PM
Last Updated : 21 Jun 2025 12:26 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முழக்கங்களை வழங்குவதில் நிபுணராக இருப்பதாகவும், ஆனால் தீர்வுகளில் அல்ல என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற மத்திய அரசின் முழக்கம், அதிக அளவில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆக குறைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், அதிக அளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்பதற்கான உறுதியை அளித்தது. ஆனால், உற்பத்தி ஏன் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது, இளைஞர்களின் வேலையின்மை ஏன் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது, சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?
பிரதமர் மோடி முழக்கங்களை வழங்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் அல்ல. 2014 முதல், உற்பத்தி நமது பொருளாதாரத்தில் 14% ஆகக் குறைந்துள்ளது.
திறமையான, அறிவார்ந்த, நம்பிக்கை அளிக்கக்கூடிய ஷிவாம், சைஃப் ஆகியோரை புதுடெல்லியின் நேரு பிளேஸில் சந்தித்தேன். ஆனால், அவர்கள் தங்களின் (தொழில் தொடங்குவதற்கான) திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
உண்மை அப்பட்டமானது. அரசு இறக்குமதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் பெருகுவதில் அல்ல. இறுக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது.
புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்துவிட்டார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமும் இப்போது அமைதியாக பின்வாங்கப்படுகிறது.
நேர்மையான சீர்திருத்தங்கள் மூலமும், நிதி உதவி அளிப்பதன் மூலமும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்குத் தேவை.
மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் இங்கே நிறுவனங்களை உருவாக்கவில்லை என்றால், இறக்குமதி தொடரும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT