தற்கொலைக்கு முயன்ற 300 பேரை காப்பாற்றிய கிராமம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 300 பேரை காப்பாற்றி உள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் நிஜாமாபாத் மாவட்டம் உள்ளது. இங்கு 1,700பேர் வசிக்கும் யமாச்சா என்ற கிராமம், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ளது.

இந்நிலையில் குடும்பத் தகராறு, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளை கையாள முடியாதவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இங்குள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையானது. இதிலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழைக்காலத்தில் இங்கு தற்கொலைகளும் அதிகமாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த கிராம மக்களை உறுப்பினர்களாக கொண்டு நிஜாமாபாத் காவல் நிலைய போலீஸார் ஒரு வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தினர். யாரேனும் காணாமல்போனால் அப்புகார் தொடர்பான விவரத்தை இக்குழுவில் போலீஸார் பகிர்ந்து கொள்கின்றனர். உடனே கிராம மக்கள் உஷாராகி இரவு நேரத்திலும் தங்கள் பகுதியில் ஆள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கின்றனர். யாரேனும் ஆற்றில் குதித்தால் தங்களை உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றுகின்றனர். இந்த வகையில் இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 300 பேரை காப்பாற்றி உள்ளனர்.

அப்படி காப்பாற்றப்பட்டவர்கள் பிறகு இந்த கிராமத்தினருக்கு தடபுடலாக விருந்துவைத்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in