Last Updated : 15 Jul, 2018 07:51 PM

 

Published : 15 Jul 2018 07:51 PM
Last Updated : 15 Jul 2018 07:51 PM

பிரதமர் மோடி நோயுற்ற மனநிலையில் இருக்கிறார்: காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்று பிரதமர் மோடி பேசி இருப்பது, அவர் நோயுற்ற மனநிலையில் இருப்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு, பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆசம்கார்க் நகரில் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, முத்தலாக் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எதிராக இருக்கிறது, முஸ்லிம் ஆண்களுக்கு ஆதரவான கட்சி என்று பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

’’பிரதமர் மோடி தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் மாண்பு குறையும் வகையில் பேசி வருகிறார். ஆசம்கார் நகரில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பேச்சு பிரதமர் மோடி மிகவும் நோயுற்ற மனநிலையில் இருக்கிறார், குழப்பமான மனநிலையில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் பேச்சு சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. தேசத்தில் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் காங்கிரஸ் கட்சி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியாகும். ஆனால், இதை முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி எனப் பிரதமர் மோடி பேசி இருப்பது தகுதியில்லாத வார்த்தையாகும்.

பிரதமராக இருக்கும் ஒருவரின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை தரும் விஷயமாகும். வரலாற்றையும், உண்மைகளையும் தவறாகச் சித்தரித்து பிரதமர் மோடி பேசிவருகிறார். மோடி நாடு முழுமைக்கும் பிரதமர் என்பதை மறந்துவிட்டு, பாஜகவுக்கு மட்டும்தான் பிரதமர் என்ற ரீதியில் பேசி வருகிறார்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், மவுலானா ஆசாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்களாக யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அறிய மோடி ஒருமுறை வரலாற்றைத் திரும்பப் படிக்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் தவறான தகவல்களைத் தெரிவிக்காமல் இருப்பார்.

இந்த தேசத்தில் உள்ள அனைத்து மக்களும் பொதுவான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். வேற்றுமையில் ஒற்றுமை எனும் விஷயத்தை காங்கிரஸ் கட்சி மிகவும் மதிக்கிறது.

காங்கிரஸ் கட்சி முத்தலாக் மசோதாவுக்கு எதிரானது என்று பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு எனத் தனியாக விதிமுறைகள், ஒழுங்கு முறைகள் இருக்கின்றன.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, மசோதாக்களைப் புற வழியில் நிறைவேற்றவே முயற்சித்து வருகிறது. மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றவே விரும்புகிறது. பொய்களை விற்பனை செய்பவராக மோடி இருந்து வருகிறார்.

பிரதமர் மோடி உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், அரை உண்மைகளையும், பொய்களையும் கடந்த 4 ஆண்டுகளாகக் கூறி வருகிறார். பிரதமர் மோடியிடம் இருந்தோ அல்லது பாஜகவிடம் இருந்தோ, எந்தவிதமான நற்சான்றிதழையும், காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக 5 கோடி ஏழை மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மோடி பேசிவருவது நகைப்புக்குரியது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி அறிமுகம் ஆகியவற்றுக்குப் பின் ஏராளமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டார்கள்.’’

இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x