

காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் அணை புதன்கிழமை காலை முழு கொள்ளளவை (124.80 அடி) எட்டியது. இதனால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதேபோல கேரள மாநிலம் வயநாட்டைச் சுற்றியுள்ள பகுதி களிலும் கனமழை பெய்ததால் மைசூர் மாவட்டம் ஹெச்.டி.கோட்டை அருகே உள்ள கபினி அணை கடந்த மாதம் 18-ம் தேதி முழுகொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு 'பாகினா பூஜை' செய்யப்பட்டு, பாசனத்திற் காக 30,000 கன அடிநீர் திறக்கப் பட்டது.
தொடர்மழையில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. காவிரியின் குறுக்கே அமைந்துள்ள பெரிய அணையான இது புதன்கிழமை காலை அதன் முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டியது.
இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 'பாகினா பூஜை' என அழைக்கப்படும் சமர்ப்பண பூஜை செய்தார். 33 பூசாரிகள் அர்ச்சனை செய்து கொடுத்த மலர்களையும் பூஜை பொருட்களையும் அணையில் தூவினார்.
இதனைத் தொடர்ந்து அணையிலிருந்து வினாடிக்கு 50,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 47,000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக காவிரி நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்கீட்டில் சிக்கல் இருக்காது
பாகினா பூஜையைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் தொடர்ந்து பிரச்சினை நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதால், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அதிகமாக பேச முடியாது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 68 டி.எம்.சி. நீர் கூடுதலாக விடப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி உள்ளதால் இந்த ஆண்டும் கூடுதல் நீர் தரமுடியும் என நினைக்கிறேன். எனவே நதி நீர்ப் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார்.
90 ஆயிரம் கன அடிநீர்
கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணை யில் புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 2,282.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25,500 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால், 30,000 கன அடிநீர் வெளியேற்றப்படு கிறது. இதேபோல ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்தும் தலா 5,000 கன அடி நீர் திறக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே அமைந் துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளும் முழுக்கொள் ளளவை எட்டியுள்ளதால், இந்த அணைகளில் இருந்து தமிழகத் துக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.