மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
Updated on
2 min read

டேராடூன்: தனது பிறந்த நாளை முன்னிட்டு, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்கலங்கினார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார்.

டேராடூன் ராஜ்பூர் சாலையில் அமைந்துள்ள ராஷ்டிரபதி தபோவனம் 19 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இதில் 117 வகையான செடிகளும், 52 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 41 வகையான பறவை இனங்களும், 7 வகையான பாலூட்டி விலங்குகளும் இடம் பெற்றுள்ளன. இயற்கையான மூங்கில் காடுகள் இதன் சிறப்பம்சமாகும்.

21 ஏக்கரில் அமைந்துள்ள ராஷ்டிரபதி நிகேதனில் அல்லிக் குளங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், பழத்தோட்டங்கள் போன்றவை உள்ளன. 132 ஏக்கர் நிலப்பரப்பில் ராஷ்டிரபதி தோட்டம் எனும் பொதுமக்களுக்கான பூங்கா அமைந்துள்ளது. ராஷ்டிரபதி தபோவனம் 2025 ஜூன் 24 முதலும் ராஷ்டிரபதி நிகேதன் 2025 ஜூலை 1 முதலும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியையொட்டி டேராடூனில் உள்ள பார்வை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் தேசிய கல்விக் கழகத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாதிரிப் பள்ளியின் அறிவியல் சோதனைக் கூடம், கணினி சோதனைக் கூடம், கண்காட்சி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்த நாளை முன்னிட்டு பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பாடினர். பாடலைக் கேட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கண்கலங்கினார். பின்னர், கண்களைத் துடைத்துக்கொண்டு பாடலை முழுவதுமாகக் கேட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, "ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் முன்னேற்றத்தை, அந்தச் சமூகத்தின் மக்கள் மாற்றுத் திறனாளிகளை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பிடலாம். நமது கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் மனிதகுல கருணையும், அன்பும் எப்போதும் நிறைந்துள்ளது.

சுகம்ய பாரத் எனும் திட்டம் மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கவும், அவர்களின் சமமான பங்கேற்பை உறுதிப்படுத்தவும் அரசு பாடுபடுகிறது. இன்றைய சகாப்தம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சகாப்தம். மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன், மாற்றுத் திறனாளிகள் கூட முக்கிய நீரோட்டத்திற்கு பங்களிக்க முடியும்" என தெரிவித்தார்.

முன்னதாக, தனது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்புள்ள சக குடிமக்களே, எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. உங்கள் செய்திகளைப் படிக்கும்போது எனக்கு ஆழ்ந்த நன்றியுணர்வு ஏற்படுகிறது. உங்கள் அன்பான வார்த்தைகள் எனக்கு உத்வேகத்தையும் பலத்தையும் தருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in