பிஹார் காவலர் தேர்வு ஊழல் தொடர்பாக பல மாநிலங்களில் அமலாக்கத்​ துறை சோதனை

பிஹார் காவலர் தேர்வு ஊழல் தொடர்பாக பல மாநிலங்களில் அமலாக்கத்​ துறை சோதனை

Published on

பாட்னா: பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

கடந்த 2024-ம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாயின. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதே கும்பலுக்கு பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் தொடர்பு உள்ளது. அப்போது 18 லட்சம் விண்ணப்பதாரர்கள் பிஹார் முழுவதும் 529 மையங்களில் காவலர் தேர்வை எழுதினர். வினாத்தாள் வெளியான குற்றச்சாட்டையடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக பிஹார் காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. காவலர் தேர்வுக்கான வினாத்தாள்கள விற்பனை செய்ததில் அதிகளவிலான பணம் கை மாறியுள்ளது. இது தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் சஞ்சீவ் முகியா. இவர் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றுகிறார். இவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்த கால்டெக்ஸ் மல்டிவென்ச்சர் என்ற தனியார் நிறுவனத்திடம் தான் பிஹார் காவலர் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. வினாத்தாள் கசிவில் இந்நிறுவனத்தின் கவுசிக் குமார் கர் உடந்தையாக இருந்துள்ளார். இவர் சஞ்சீவ் முகியா குப்பலுடன் இணைந்து காவலர் தேர்வு வினாத்தாள்களை தேர்வுக்கு முன்பே விற்பனை செய்துள்ளார்.

இதில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பிஹாரில் பாட்னா, நாலந்தா ஆகிய இடங்களிலும், ஜார்கண்ட்டில் ராஞ்சியிலும், உ.பி.யில் லக்னோவிலும், மேற்குவங்கத்தில் கொல்கத்தாவிலும் நேற்று சோதனை நடத்தியது. பிஹார் போலீஸ் அதிகாரிகள் சிலரும், அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in