சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக

சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக
Updated on
1 min read

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி. பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் குன்வர் பாஸித் அலி கூறுகையில் "வரவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இதை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறுவது முக்கியமாகிறது.

ஏனெனில், இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பன்முகத்தன்மை மறைக்கப்பட்டுள்ளது. விரிவான இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, பல்வேறு முஸ்லிம் சாதிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்தும்.

இது, அவர்களுக்கு பயனுள்ள கொள்கை வகுப்பதிலும், சமூகநீதியை வழங்குவதிலும் உதவியாக இருக்கும். இது சாதி கணக்கெடுப்பே தவிர, மதக் கணக்கெடுப்பு அல்ல. சாதி என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனவே, இது தொடர்பாக முஸ்லிகள் இடையே விரைவில் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம். எங்களின் இந்த நடவடிக்கை புரட்சிகரமானதாக அமையும்" என்றார்.

இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதம் பேர் பாஸ்மந்தா (பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை) சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்பான சாதிக் கணக்கெடுப்பு தரவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையில் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.யில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் 2027-ல் வருகிறது. இதற்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானால் அது, உ.பி. அரசியலில் பெரிய புயலைக் கிளப்பவும் வாய்ப்புள்ளது.

ஏனெனில் உ.பி.யில் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் சாதியை பெயருன் இணைத்து குறிப்பிடுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின் அவர்களில் எத்தனை பேர் அக்காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்பதும் வெளியாகி விடும். இது, இந்து-முஸ்லிம் மத அரசியல் மேலோங்கி நிற்கும் உ.பி.யின் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானது.

இதுவரை உ.பி.யை ஆட்சி செய்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் வரலாற்றுரீதியாக முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்தியதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த அரசியலைப் புரிந்துகொண்டு முஸ்லிம்கள் தங்கள் ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அளிப்பதாகவும் பாஜக பேசி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in