அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி

அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம் அமைகிறது. 150 வருட கால தொழிலை அங்கீகரிக்கும் வகையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார்.

இந்தியாவின் பூட்டுகளின் நகரமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் கருதப்படுகிறது. இந்நகரம் டெல்லிக்கு 150 கி.மீ தொலைவில் மிக அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அலிகர் நகரில் முஸ்லிம் கைவினை கலைஞர்கள் அதிகம் இருந்தனர். இதனால், அரசின் கோப்புகளை பாதுகாக்க வேண்டி பெரிய அளவிலான தகரம் மற்றும் இரும்பு பெட்டிகள் அலிகரில் தயாரிக்கப்பட்டன. இவற்றைப் பத்திரமாகப் பூட்டி வைக்க பூட்டுக்களும் அலிகரிலேயே தயாரிக்கப்பட்டன.

அந்த வகையில், சுமார் 150 வருட காலமாக அலிகர் இந்தியாவின் சிறந்த பூட்டு தொழில் நகரமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி அலிகர் நகரில் கட்டிடங்களுக்கான பிளம்பிங் மற்றும் ஹார்டுவேர் உதிரி பாகங்களும் தற்போது தயாரிக்கப்படுகின்றன. அவை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனவே, அலிகர் நகரின் 150 ஆண்டுகள் பூட்டு உற்பத்தித் தொழிலை அங்கீகரிக்கும் வகையில் ’பூட்டு அருங்காட்சியகம்’ அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அம்மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் பூட்டு அருங்காட்சியகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து அலிகர் நகராட்சி ஆணையர் பிரேம் பிரகாஷ் மீனா கூறுகையில், “இந்த அருங்காட்சியகம் முதல்வர் வைஷ்விக் நகரோதயா யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டு அருங்காட்சியகம் அமைக்க நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரம் பெறப்பட்டுள்ளது.’ என்றார்.

பூட்டு அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஏழு மாதங்களில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் அலிகரின் பூட்டு உற்பத்தித் துறையின் வரலாற்றை விவரிக்கும் என தெரிகிறது. மேலும், அருங்காட்சியகம் அமைந்தால், இதுவே உலகிலேயே பூட்டுக்களுக்கான அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் என்ற பெறும் இந்தியாவிற்கு சேரும் எனக் கூறுகின்றனர்.

அருங்காட்சியகத்தில் பூட்டுகள் உருவானது முதல் தற்போது வரை பல தசாப்தங்களாக பூட்டுகளின் பயணத்தைக் காண முடியும். இதற்காக, அலிகர் பகுதியை சேர்ந்த பூட்டு தயாரிப்பாளர்களிடம் உள்ள பழங்காலப் பூட்டு வகைகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in