Published : 19 Jun 2025 07:54 AM
Last Updated : 19 Jun 2025 07:54 AM
அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பயணம் செய்த பெரும்பாலான காப்பீட்டுதாரரும், அவர் நியமித்த நாமினியும் ஒருசேர உயிரிழந்துள்ளனர். இதனால், இழப்பீட்டு தொகையை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணம் செய்த 241 பேர், கட்டிடத்துக்குள் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் குடும்பத்துடன் லண்டன் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து ஏற்பட்டவுடன் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), காப்பீட்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு காப்பீடு செய்தவர்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் காப்பீடு வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
காப்பீடு எடுத்துக் கொண்ட பாலிசிதாரர் மற்றும் அவரது நாமினி என இருவருமே இந்த விமான விபத்தில் உயிரிழந்ததால் காப்பீட்டு தொகையை யாரிடம் வழங்க வேண்டும் என்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வருவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விரைவாக காப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய எல்ஐசி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், எச்டிஎப்சி லைப், இப்கோ டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அகமதாபாத் மருத்துவமனை வளாகத்திலேயே உதவி மையங்கள் அமைத்துள்ளன.
அதிகாரிகள் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் தரவுகளை உறுதி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விபத்தில் பாலிசிதாரர், நாமினி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதால் உரிய பயனாளிகளை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அதற்கான தீர்வுகளுக்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT