சர்வோதயா பள்ளியில் நீட்தேர்வு எழுதிய 25 மாணவிகளில் 12 பேர் தேர்ச்சி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச்த்தில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவிகள் 25 பேர் நீட் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டம் மரிஹானில் உள்ள சர்வோதயா வித்யாலயாவைச் சேர்ந்த 25 மாணவிகள் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வை எழுதினர்.

இதில், கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 12 மாணவிகள் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். இவர்கள் அனைவருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

உ.பி.யின் சமூக நலத் துறையால் நடத்தப்படும் சர்வோதயா பள்ளிக்கு இது குறிப்பிடத்தக்க சாதனையாக மாறியுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு விடுதி வசதியுடன் 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்படும் சர்வோதயா பள்ளிகளில் பெண்கள் இலவசமாக தங்கி போட்டி நுழைவுத் தேர்வுகளுக்கு படிக்க தேவையான வசதிகள் அனைத்தையும் சமூக நலத்துறை செய்து கொடுத்துள்ளது. இவை அனைத்தும் இலவசம்.

இந்த வெற்றி சர்வோதயாவின் பிராண்டுக்கு வியத்தகு ஊக்கத்தை அளித்துள்ளது என்று சமூக நலத்துறை அமைச்சர் அசிம் அருண் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் பூஜா மற்றும் ஸ்வேதா கூறுகையில், “ இது சாத்தியமாகும் என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி உயர்தரமானது. கடின உழைப்பு மற்றும் அரசின் உதவியால் எங்களின் கனவு நனவாகியுள்ளது" என்றனர்.

உத்தர பிரதேசம் முழுவதும் தற்போதைய நிலையில் 100 சர்வோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல துறை இயக்குநர் குமார் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in