உ.பி.யில் தந்தை, மகனுக்கு ஒரே நேரத்தில் காவலர் பணி: சாத்தியமானது எப்படி?

உ.பி.யில் தந்தை, மகனுக்கு ஒரே நேரத்தில் காவலர் பணி: சாத்தியமானது எப்படி?
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் பணிக்காக ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில், தந்தையும், மகனும் ஒரே சமயத்தில் காவலர் பணி பெற்றுள்ளனர்.

உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ளது ஹாப்பூர். இங்குள்ள தவுலானா பகுதியின் உதய்பூர் நங்லா கிராமத்தில் தந்தையான யஷ்பால் பவுஜி (40), தன் மகன் சேகர் நாகருடன் (19) வசிக்கிறார். யஷ்பால் தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர். இவர் 16 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இதன் பிறகும் வேறு பணியை தேடியவர், உபியின் காவல்துறையில் சேர விரும்பியுள்ளார். அப்போது அவரது மகன் சேகர் நாகரும் உபி காவல்துறையின் காவலர் பணியில் சேர முயன்று கொண்டிருந்தார். இதற்காக தன் மகனுடன் இணைந்து தந்தை யஷ்பாலும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். இருவருமே தேர்வெழுதி ஒன்றாகவே காவலர் பணிக்கு தேர்வாகி விட்டனர். இவர்களது காவல் பணிக்கான சேர்க்கைக் கடிதத்தை தந்தையும், மகனும் லக்னோவில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து பெற்றுள்ளனர்.

இந்த இருவரின் தேர்வு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இருவரும் இனி ஒரே சமயத்தில் உ.பி. காவலர் சீருடைகளை அணியத் தயாராகின்றனர்.

இவர்களது காவல் பணியால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை வீசுகிறது. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி தந்தை, மகனை பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in