Published : 25 Jul 2018 12:21 PM
Last Updated : 25 Jul 2018 12:21 PM

இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம்: பேருந்து மீது கல்வீச்சு; ரயில் போக்குவரத்து முடக்கம்

மகாராஷ்டிராவில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மராட்டிய சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவுரங்காபாத்தில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுமட்டுமின்றி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய சிலர் தற்ககொலை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அவுரங்காபாத் மாவட்டத்தில் 2 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 2 தீயணைப்பு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. இதில் காவலர்கள் சிலர் காயமடைந்தனர். இந்த மோதலில் காயமடைந்த காவலர் ஷ்யாம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மும்பையில் ரயில், வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. தானே உள்ளிட்ட இடங்களில் அரசு பேருந்துகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

மராத்தா சமூகத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து முடங்கியது. அதுபோல சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே காணப்படுகிறது. ஆம்புலன்ஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x