ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

இஸ்ரேல் தாக்குதலால் பற்றி எரியும் தெஹ்ரானில் உள்ள ஷரண் எண்ணெய் கிடங்கு.
இஸ்ரேல் தாக்குதலால் பற்றி எரியும் தெஹ்ரானில் உள்ள ஷரண் எண்ணெய் கிடங்கு.
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்து வருவதால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம், பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள மற்ற குடியிருப்பாளர்களும் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நகரத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில இந்தியர்கள் ஆர்மீனியாவின் எல்லை வழியாக ஈரானை விட்டு வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் நோக்கில் தூதரகம் தொடர்ந்து இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது. நிலைமை சீராக இல்லாத நிலையில், மேலும் ஆலோசனைகள் வழங்கப்படலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெஹ்ரானில் இருந்து வெளியேறும்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்திய தூதரகம் மூன்று தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. அவை: +98-9010144557, +98-9128109115 மற்றும் +98-9128109101

“தெஹ்ரானில் இருக்கும் தூதரகத்துடன் தொடர்பில் இல்லாத அனைத்து இந்திய குடிமக்களும் உடனடியாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அவர்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு எண்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்றும், "சில இந்தியர்கள் ஆர்மீனியாவுடனான எல்லை வழியாக ஈரானை விட்டு வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது” என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை நடத்தும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால், இத்தகைய அறிவிப்புகளை இந்திய தூதரகம் வெளியிட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in