அகமதாபாத் விமான விபத்து: மும்பைக்கு கொண்டு வரப்பட்ட விமானி சுமித் சபர்வாலின் உடல்

அகமதாபாத் விமான விபத்து: மும்பைக்கு கொண்டு வரப்பட்ட விமானி சுமித் சபர்வாலின் உடல்
Updated on
1 min read

மும்பை: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.

விமானி சுமித் சபர்வாலின் உடல் இன்று காலை விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை அடைந்து, அவரது குடும்பத்தினரால் பவாய் நகரில் உள்ள ஜல் வாயு விஹாரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சபர்வாலின் வீட்டில் ஒரு மணி நேரம் அவரது உடல் வைக்கப்படும். பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் சகாலா மின்சார தகன மைதானத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார். சுமித் சபர்வால் (56) மும்பையில் உள்ள தனது வயதான பெற்றோருடன் வசித்து வந்தார்.

ஜூன் 12 அன்று 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பிஜே மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். மேலும், கட்டிட வளாகத்தில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர்.

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தை கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கினர். சுமித் சபர்வாலுக்கு 8,200 மணிநேரம் பறந்த அனுபவம் இருந்ததாகவும், குந்தர் 1,100 மணிநேரம் பறந்த அனுபவம் கொண்டவர் என்றும் விமானப் போக்குவரத்து ஆணையம் முன்பு தெரிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in