Published : 17 Jun 2025 07:04 AM
Last Updated : 17 Jun 2025 07:04 AM

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியா

புதுடெல்லி: இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ளள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு இது 180 ஆக அதிகரிக்கும். மேலும் மேம்பட்ட அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும் புது வகையான அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடர்ந்து இந்தியா உருவாக்கி உள்ளது. இதன்மூலம் அணு ஆயுத திறனில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் 600 ஆயுதங்கள் உள்ளன. சீனா 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 100 அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் சண்டை நடைபெற்றது. இதுபோன்ற சூழலில் இரு பக்கத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த 9 நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரிக்கவும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவும் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x